Thursday, 27 June 2013

தனி ஆவர்தனம்



ஊரெல்லாம் ஒளி விளக்கு
உயிரெல்லாம் உறக்கத்தில்
வெளியே
ஒற்றை நாயின் உரத்த ஓலம்

கதவுக்கு உள்ளே
உறங்குவதாக பாசங்கு செய்யும்
பெண்ணுடம்பு ஒன்று
உதறி விழித்துகொள்கிறது.

முகாரி முடக்கிய மனம்
பூபாளம் பாட விழைகிறது.

உலகத்துக்காவது விடியட்டுமே!?!?

Thursday, 13 June 2013

நா.......ம்

நா.......ம்




நீயாக இருந்த நானும்
நானாக இருந்த நீயும்
நாமாக இருந்த காலம் போய்
நான் நானாகவும், நீ நீயாகவும்
இருப்பதே இயல்பாகி போனது
 இன்று
என் தோட்டத்தில் பூக்கள் பறிக்கபடுவதில்லை
உன் கிணற்றில் உறவென்று யாரோ
நீர் இறைப்பதாக ஊரெல்லாம் ஓலம்.

Saturday, 25 May 2013

சுழற்சி

facebook



ப்ரபஞ்சம் சற்றே அழகாக 
தூவப்பட்ட துகள்கள் நாம்
 அழகே அழுக்குகளாய் மாற
ஆனந்தம் தொலைத்த அண்டம்
அணு அணுவாய்  
அலறிக் கொண்டிருக்கிறது






பிண்டங்களாய்
பிணம் தின்னிகளாய் 
பிறந்தும் இறந்தும்
பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம்
மனிதம் தொலைத்து
மிருகங்களாய்.

Thursday, 23 May 2013

குயில் கூடு











 கரைந்துண்டு வாழ்க்கை நடத்திய காக்கை கூட்டுக்குள்
குடி வந்த குயில்களுள் ஒன்று
காகமாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது
காக்கையின் வீடு
குயில் கூடானது.


பாசாங்கும் பசப்பும் செய்த பாச ஓலங்கள் ஓய்ந்த பின்னும்
தொடர்கிறது குயிலின் அன்புக் கூவல்
காகத்தின் இரணம் ஆற்ற
 இது
இன்று 
குயில் கட்டிய காக்கை கூடானது.



Thursday, 9 May 2013

வசுதேவ குடும்பகம்












நீ
யார்?
எனக்கு நீ யார்?
என் ஊன் வளர் சேயும் அல்ல
என் உயிர் சேர்ந்த உறவும் அல்ல
நீ யார்?
எனக்கு ...நீ யார்?
பிரபஞ்ச சூத்திரம் உரைத்த தகப்பன் சாமியாய்
போர் முகத்தில் பார்த்தனாய்
குசேலனை குபேரனாக்கிய கண்ணனாய்
யசோதை சீராட்டிய தேவகி  நந்தனாய்
அர்ஜுனனுக்கு வாழ்வின் அர்த்தம் சொன்ன  பரந்தாமனாய்
தாயாய் , தனயனாய், சேயாய்,
தோள் சாய்த்து ஆறுதல் சொல்லும் தோழனாய்
என் இனையாய் நடை போடும்   நீ யார்?
எனக்கு நீ யார்?