Friday, 29 April 2022

இருப்பு

விளிம்பில் நிற்கும்பொழுதெல்லாம்...

விழுந்து விடுவேன் என்ற பயம் 

 கவ்வி பிடிக்கும் பொழுதெல்லாம்...

உயிர் போகும் கடைசி நிமிஷத்தில் வாய்த்த

முதலுதவியாய்...உன் குரல்.

மீண்டும் ஓரு மீட்சி !

மீண்டும் ஓரு நீட்சி...


திரிசங்கு சொர்க்கத்தில்...

துகிலுரியப்பட்ட  திரெளபதையாய்...

நிராயுதபாணியாக...

 நடனமாடிக்கொண்டிருக்கும்

மனமே- நீ

நிரந்தரமாய் மீள்வதெப்போ?!?!?



Monday, 25 April 2022

மண(ன)க்கோலம்

 அன்பில் இழைத்து வரையப்படும் 

எல்லா கோலமும் அழகுதான்.

அவனைப் பார்த்துக்கொண்டே

அவள் வரைந்த கோலமும்...

அவள் கோலத்தை பார்த்துக்கொண்டே

அவன் வரைந்த கோலமும்...

அழகோ அழகு!!!

தோள் கண்டார் தோளே கண்டார்,

தாள் கண்டார் தாளே கண்டார்,

கோலம் கண்டாரும் அஃதே!


நதி வீழ்ந்த இலை



 நதியில் மிதக்கும் இலை...

அலையின் கை கோர்த்து...

நித்தம் தொடரும் நெடுந்தூரப் பயணம்.

எந்தக் கரை கரம் நீட்டி நிலம் சேர்க்குமோ ...

தெரியவில்லை.!!!

நீளும் கரங்கள் எல்லாம் பற்றிக்கொள்ளத் தகுமோ...???

பற்றியக் கரங்கள் எல்லாம் தொடர்ந்து நீளுமோ...???

உறுதியும் உடன்பாடுமற்ற நீள் வெளியில்,

தன்னைப் பற்றி நிற்கும் சிற்றுயிரை

கடல் சேரும் முன் கரையேற்றிவிட

பிடிவாதமாய் பயணிக்கும் ...

அந்த இலையை பார்க்க நேர்ந்தால்...

சுற்றியிருக்கும் நீரைக் கலக்காமல் விட்டுவிடுங்களேன்...பாவம்!!!





வாழ்க்கைச்சுரங்கம்


 

மண்ணுக்குள் கரித்துண்டாய்

புதையுண்ட வாழ்க்கையில்

விழி சிந்தும் நீரும் கூட ஆடம்பரம்தான்.

கொஞ்சம் கூடினாலும் 

நெஞ்சமே மூழ்கிவிடக்கூடும் .

வாடி, வதங்கி, வைரமாகும் நாளில் 

கைப்பற்ற துடிக்கும் ராவண குமரர்களுக்கு

கரித்துண்டு தன் கதை சொல்லுமோ?!?!

கதை கேட்ட காதுகள் எதை நம்புமோ?!?!

எத்தனை மின்னினாலும்...

வைரத்தின் முகவாய்கட்டையில்...

திருஷ்டியாய் அந்த கருப்பு பொட்டு.