Sunday 11 December 2022

பெண் என்னும் பெரும் ஆழி


 

எழுந்து, வீழ்ந்து...

மீண்டும் எழும் நான்

ஒர் பெரும் கடல்.


அழகான விசித்திரம்

என் உலகம்.

நட்பு பாராட்டும் திமிங்கலங்களும் உண்டு,

ஆளை விழுங்கும் அகழிகளும் உண்டு.


என் மனவெழுச்சியின் பெரும் அலைகள்

உங்கள் பயந்த பார்வையில் கலவரம் சேர்க்கக்கூடும்

கால் நனைத்து விளையாடும் சிறு அலைகளோ...

சில்லென்ற என் நேசம் சொல்லும்.


உங்கள் கற்பனை கப்பல்கள் பயணிக்க... உடல் கீறியும் வழி தருவேன்.

 மிரளவைக்கும் சோகங்களையும் சுமைகளையும்...

மூழ்கடித்து முகிழ்த்தெழுவேன்.

 

அணைத்து முத்தமிட நீளும்

    என் அலைக் கரங்களை,

யூதாசின் முத்தங்கள் என

    பூமிக்கு அறிமுகம் செய்யாதீர்.

அன்பின் ஆழம் பார்க்காமல்,

    அழிவெனப் பழிக்காதீர்.


கண்டங்களைக் கடந்து விரியும்

     பிரமாண்டம் நான் - உம்

புழக்கடை கிணற்றில் அடங்கி

   புழுங்கிச் சாவேன் என்று காத்திருக்காதீர்

எத்தனை முறை வீழ்ந்தாலும்

  மீண்டும், மீண்டு எழுவேன்.


பீனிக்ஸ் பறவையாய் சிறகு விரிப்பேன்;

அறிவுக் கண் கொண்டு அண்டம் அளப்பேன்.

யுகந்தோறும் பெண்ணாய் உயிர்ப்பேன்;

மானுடம் மலர அன்பால் உய்விப்பேன்.


கிணற்றுத் தவளைகளே விடைகொடுங்கள்;

கடலாய் பரவிப் பெருக வழிவிடுங்கள்.








Sunday 8 May 2022

அஃஷய பாத்திரம்

 






உன்னிடம்  ஒரு தனித்துவமான செய்தி உள்ளது,
பாடுவதற்கு ஒரு தனித்துவமான பாடல் உளது,
பறிமாறுவதற்கு ஒரு தனித்துவமான அன்பு உளது.
இந்தச் செய்தியும், இந்தப் பாடலும், இந்த அன்புச் செயலும் உன்னிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.😇😍

அன்னையெனும் அஃக்ஷயப் பாத்திரமே...
அள்ளி வழங்கு!
நீர்த்துவிடாத உன் அன்பும் - என்றும்
தீர்ந்துவிடாத உன் பாடலும்,
இப்பிரபஞ்சத்தை தொடர்ந்து தாலாட்டட்டும்!
அன்னையர் தின நல்வாழ்த்துகள்
எனதருமை
ராஜமாதாக்களே💐🙏🥰


Thursday 5 May 2022

இறவா சிறகு


பறக்க உதவாத போது

  உதிர்க்கப்பட்ட...

   ஒரு வலிய பறவையின் எளிய சிறகு,

தன் மிதவைக் கால

   வெளியின் ஓளியையும்,

   தென்றலின் சிலிர்ப்பையும்,

    தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது!


எங்கோ பறக்கிற பறவையின் சிறகுகள் படபடக்கிறபோது...

தன் ஞாபகக்கூட்டிற்குள் ஓடி ஒளிந்துகொள்கிறது...இறகு!


சிறகாய் நீ பறக்காவிட்டால் என்ன

இறகாய் இதம் கொடு போதும் - என

தாங்கிக் கொள்ள நீள்கிறது ஒரு கரம்!


இறகு இதமோ...

கரம் தான் இதமோ...

தெரியவில்லை. 

காற்று கதகதப்பாகிறது;

சுற்றிலும்...

இறந்து கிடந்த இலைகளும் எழும்பி            

சிறகடிக்கின்றன.!




Friday 29 April 2022

இருப்பு

விளிம்பில் நிற்கும்பொழுதெல்லாம்...

விழுந்து விடுவேன் என்ற பயம் 

 கவ்வி பிடிக்கும் பொழுதெல்லாம்...

உயிர் போகும் கடைசி நிமிஷத்தில் வாய்த்த

முதலுதவியாய்...உன் குரல்.

மீண்டும் ஓரு மீட்சி !

மீண்டும் ஓரு நீட்சி...


திரிசங்கு சொர்க்கத்தில்...

துகிலுரியப்பட்ட  திரெளபதையாய்...

நிராயுதபாணியாக...

 நடனமாடிக்கொண்டிருக்கும்

மனமே- நீ

நிரந்தரமாய் மீள்வதெப்போ?!?!?



Monday 25 April 2022

மண(ன)க்கோலம்

 அன்பில் இழைத்து வரையப்படும் 

எல்லா கோலமும் அழகுதான்.

அவனைப் பார்த்துக்கொண்டே

அவள் வரைந்த கோலமும்...

அவள் கோலத்தை பார்த்துக்கொண்டே

அவன் வரைந்த கோலமும்...

அழகோ அழகு!!!

தோள் கண்டார் தோளே கண்டார்,

தாள் கண்டார் தாளே கண்டார்,

கோலம் கண்டாரும் அஃதே!


நதி வீழ்ந்த இலை



 நதியில் மிதக்கும் இலை...

அலையின் கை கோர்த்து...

நித்தம் தொடரும் நெடுந்தூரப் பயணம்.

எந்தக் கரை கரம் நீட்டி நிலம் சேர்க்குமோ ...

தெரியவில்லை.!!!

நீளும் கரங்கள் எல்லாம் பற்றிக்கொள்ளத் தகுமோ...???

பற்றியக் கரங்கள் எல்லாம் தொடர்ந்து நீளுமோ...???

உறுதியும் உடன்பாடுமற்ற நீள் வெளியில்,

தன்னைப் பற்றி நிற்கும் சிற்றுயிரை

கடல் சேரும் முன் கரையேற்றிவிட

பிடிவாதமாய் பயணிக்கும் ...

அந்த இலையை பார்க்க நேர்ந்தால்...

சுற்றியிருக்கும் நீரைக் கலக்காமல் விட்டுவிடுங்களேன்...பாவம்!!!